Wednesday, 12 June 2013

முருங்கை மருத்துவ பலன்கள்

1. மூலிகையின் பெயர் :- முருங்கை.

2. தாவரப்பெயர் :- MORINGA OLEIFERA.

3. தாவரக்குடும்பம் :- MORINGACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, ஈர்க்கு, பூ, பிசின், பட்டை ஆகியன.


5. வளரியல்பு :- முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம் என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலி ஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன் மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையை ரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள். இதன் ஆரம்பம் இமையமலை அடிவாரம் பின் பாக்கீஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானீஸ்தான் ஆகும். பிலிப்பையின்ஸ்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லண்ட், தாய்வானிலும் பயிராகிறது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதைவருடா வருடம் 3 அடி விட்டு கிழைகளை வெட்டி விடுவார்கள். இலை, பூ, காய் ஆகியவை சமையலுக்குப் பயன்படுவதால் தமிழகமெங்கும் காணப்படும். தற்போது 3 அடி நீளமான காய்கள் விடும் மரம் கூட உற்பத்தி செய்துள்ளார்கள். மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது. தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பலன் தரக்கூடிய மரவகைகளை வணிக ரீதியாகப்பயிர் செய்து லாபம் அடைகின்றனர். முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- இலைச்சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேலைகளில் மல மிளக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள இலை. குருதியை தூய்மையாக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிக் காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப்பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். பட்டை கோழை, காச்சல் நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும்.குடல் வாயு அகற்றும், பட்ட இடத்தில் அரிப்பு உண்டாக்கிக் கொப்பளிக்கச் செய்து புண்ணுண்டாக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.


பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு
வலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்.

முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது
சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

Monday, 27 May 2013

வாய்புண்களை குணமாக்கும் மாம்பூ கசாயம்

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.


தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

Monday, 29 April 2013

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!


1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.


6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.


7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.


8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.


9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.


10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.


11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.


12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Friday, 26 April 2013

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்

கொய்யாப்பழம் மிகுந்த சுவையுடயதாகும் , சத்து நிரம்பியதாகவும், எளிதில் கிடைப்பதாலும் இது நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை. ஆப்பிளைப் போன்று வைட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும், தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது இருக்கிறது. மேலும் காஷ்மீரிலிருந்தோ, இமாச்சலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.


கொய்யா மரத்தின் தாயகம் தென் அமெரிக்கா ஆகும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் ஃபிலிப்பைன்சுக்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக்கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.

கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை "சிவப்புக்" கொய்யா என்றும் "வெள்ளைக்" கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.


கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் :

ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் தலா -10 மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின் 'சி' 210 மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ்-சிறிதளவு.

கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப்போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக்கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக்கொண்டு தயாரித்த கசாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடை செய்யும். இலையைக் கசாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் சரியாகும்.